ஆபீஸ் முடிந்து அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அருண் முன்னால் கலா சென்று கொண்டு இருந்தாள்.
முப்பத்தைந்து வயதாகும் கலாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவளுக்கு 2 அக்கா, 1 தங்கை. இவளின் உழைப்பில் தான் அவர்கள் வண்டி ஓடுகிறது. மிகவும் கஷ்டப்பட்டு இரண்டாவது அக்காவையும் கரை ஏற்றி விட்டாள். அடுத்து தங்கைக்கு மணம் முடித்த பின்னர் தான் இவள் கல்யாணம் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும்.
அருணுக்கு வயது முப்பத்தி எட்டு. அவனுக்கும் எத்தனையோ இடத்தில் பெண் பார்த்தாகி விட்டது. ஆனால் இவன் ராசி. இவன் பார்க்கும் பெண்களுக்கெல்லாம் இவனை விட பெரிய, நல்ல இடமாக அமைந்து மணமாகி விடுகிறது.
முன்னால் சென்று கொண்டிருந்த கலாவை மெதுவாக அழைத்தான் அருண். என்ன என்பது போல பார்த்தாள் கலா. 'உங்கள பத்தி எனக்கு தெரியும். நீங்க இப்போ உங்க தங்கைக்கு வரன் பார்த்துட்டு இருக்கீங்க இல்ல? நான் வந்து உங்க தங்கைய பெண் பார்க்கறேன். என்னோட ராசிபடி உங்க தங்கைக்கு உடனே நல்ல இடத்துல அமைஞ்சுடும்' என்றான் அருண்.
மெதுவாக அவனை பார்த்து சொன்னாள் கலா - 'சாரி அருண். என் தங்கைக்கு ஏற்க்கனவே இடம் அமஞ்சிடுச்சு. ஆனாலும் நீங்க என் வீட்டுக்கு பெண் பார்க்க வரீங்க'
புரியாமல் பார்த்தான் அருண்.
'என்னை பார்க்க வாங்க' என்றாள் கலா வெட்க்கத்தோடு.
- "இந்த கதையை நான் குமுதம் பத்திரிகையில் படித்தேன். இதில் கதையின் முடிவு மிக அருமை. கலாவிற்கு அருணின் நல்ல மனம் புரிந்து, அவனையே மணம் முடிக்க முடிவு செய்துள்ளாளா?? அல்லது தன்னை பெண் பார்க்க வந்தால் நல்ல இடமாக அமையும் என்ற அழைத்திருக்கிறாளா??"